சன் டிவியில் ஒளிபரப்பான அரட்டை அரங்கம் என்ற நிகழ்ச்சியின் மூலம் உலகிற்கு அறிமுகமானவர் முத்துக்குமரன். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெற்றுள்ளார். முத்துக்குமரன் யார் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். முத்துக்குமரனின் தாயாருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. பொதுவாகவே இரட்டை குழந்தை பிறந்தால் அதில் ஒரு குழந்தை குறைபாடுடன் தான் பிறக்கும் என்பது அந்த காலத்தில் ஒரு நம்பிக்கையாக காணப்பட்டது . அது போலவே முத்துக்குமரனின் தாயார் ஒரு ஆண் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அதில் முத்துக்குமரனின் சகோதரி எப்போதும் துரு துருவென ஆக்டிவாக இருப்பார். முத்துக்குமரன் அதிகமாக பேசாமல் அமைதியாகவே காணப்படுவார். முத்துக்குமரனை மன வளர்ச்சி குன்றிய பிள்ளை என பேச தொடங்கினார்கள் . அவருடைய தாயார் இந்த குழந்தையை எப்படியாவது நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற வைராக்கியத்தில் காணப்பட்டுள்ளார் .
முத்துக்குமரனின் தாயார் ஏழாம் ஆண்டு வரையிலுமே படித்திருக்கிறார். வீட்டு வேலைகளை பார்த்து முத்துக்குமரனை படிக்க வைத்துள்ளார். தனக்கு உள்ள வாசிப்பு பழக்கத்தை மகனான முத்துக்குமரனுக்கும் சிறுவயதில் இருந்தே வலியுறுத்தியுள்ளதோடு வானொலியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளையும் கவனிக்க வைத்துள்ளார்.
சிறுவயதில் ஆரம்பிக்கப்பட்ட பழக்கம் முத்துக்குமரனை சிறந்த பேச்சாளராக மாற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் சிவகங்கையில் இருந்த இவர்கள் சென்னைக்கு குடி பெயர்ந்து வந்தார்கள். அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த முத்துக்குமரனுக்கு சன் டிவியில் 15 வயதிலேயே அரட்டை அரங்கம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது . சிறுவனாக காணப்பட்ட முத்துக்குமரனின் அபார பேச்சை பார்த்து பலரும் வியந்து உள்ளனர்.
பின்பு தனது வட்டார தமிழாலும் பேச்சுவார்த்தையாலும் குரல் வளமும் அவருக்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தன. முத்துக்குமரனுக்கு ஆர்ட்ஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை காணப்பட்டது. ஆனாலும் உறவினர்களின் வலியுறுத்தலால் வேறு பாடம் படித்துள்ளார் .
சென்னைக்கு வந்த முத்துக்குமரன் தான் படித்த படிப்புக்கு சம்பந்தமே இல்லாத யூட்யூபில் சேனல் ஒன்றில் சோசியல் மீடியா எக்ஸிகியூட்டிவ் என்ற போஸ்டில் சென்று அமர்கின்றார் . ஆனாலும் அந்த வேலை பற்றிய எந்த அறிவும் அப்போது முத்துக்குரனுக்கு இருக்கவில்லை. பின்பு டுவிட்டரில் ஒரு நியூஸ் போடச் சொல்லவே தனது தமிழ் ஞானத்தை பயன்படுத்தி எதுகை மோனையுடன் நியூஸ் போடுகின்றார். இதனால் அவருக்கு வாய்ஸ் ஓவர் பண்ணவும், அதன்பின் கேமரா முன் நிக்கவும் அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. இறுதியில் ஆங்கர் ஆகவும் பணியாற்றி உள்ளார்.
இதை தொடர்ந்து விஜய் டிவியில் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி முத்துகுமரனுக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பின்பு அவர் பல மேடைகளில் பேசும் வாய்ப்புகளும் அமைந்தன.
இவ்வாறான சூழ்நிலையில் தான் திடீர் வாய்ப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்பு பிக் பாஸில் இவருடைய செயற்பாடுகளும் பேச்சுத் திறமையும் நேர்த்தியான நோக்கும் பலரையும் கவர்ந்தது டாஸ்க்குகளிலும் சிறப்பாக அசத்தினார் முத்துக்குமரன்.
இறுதியில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு வெற்றி மகுடம் சூட்டப்பட்டுள்ளார். இதில் கிடைத்த பரிசுத் தொகையை தனது இரு நண்பர்களின் தொழில் முன்னேற்றத்திற்கும் மாணவர்களின் கல்விக்கும் உதவ உள்ளதாக பிக்பாஸ் மேடையில் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.