உலகம்

ஐரோப்பாவின் பிரபலமான தீவு நகரமொன்றிற்கு எச்சரிக்கை

ஐரோப்பாவின் பிரபலமான சுற்றுலா தீவான சாண்டோரினியைச் சுற்றி நில அதிர்வுகள் அதிகரிக்கும் என்று கிரேக்க அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். நான்கு துறைமுகங்களைத் தவிர்க்கவும், தங்கள் நீச்சல் குளங்களை காலி செய்யவும், உட்புற இடங்களில் கூடுவதைத் தவிர்க்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திங்கட்கிழமை பள்ளிகளை மூடவும் கேட்டுக்கொண்டுள்ளனர். எரிமலைத் தீவுகளான சாண்டோரினி மற்றும் அமோர்கோஸ் இடையே வெள்ளிக்கிழமை முதல் 200க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளதாக சிவில் பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கையில் தெரிவித்துள்ளது. நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கையில், இந்த நிலஅதிர்வுகள் எரிமலை செயல்பாடுகளுடன் தொடர்புடையவை அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் பிப்ரவரி 3 ஆம் திகதி பள்ளிகளை மூடுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது.

சாண்டோரினியில் உள்ள மக்கள் அம்மௌடி, ஆர்மெனி, கோர்போஸ் மற்றும் முக்கியமாக பயணக் கப்பல்களுக்கு சேவை செய்யும் ஃபிரா துறைமுகத்திலிருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். சாண்டோரினியின் பல துறைமுகங்கள் செங்குத்தான பாறை முகங்களால் சூழப்பட்டுள்ள ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனிடையே, ஏதென்ஸில், பிரதமர் Kyriakos Mitsotakis இந்த விவகாரம் குறித்து அவசரக் கூட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

சாண்டோரினி பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மக்களுக்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டு, காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிறப்பு பேரிடர் மீட்புப் பிரிவுகள் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ரிக்டர் அளவில் 6 புள்ளிகள் வரையிலான நிலநடுக்கத்திற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர் கணித்துள்ளார். சாண்டோரினி பகுதியில் ஆண்டுக்கு 3 மில்லியன் மக்கள் சுற்றுலா செல்கின்றனர். கிறிஸ்துவுக்கு முன்னர் 1,600ல் ஏற்பட்ட மிக மோசமான எரிமலை வெடிப்பால், தீவு தற்போதைய உருமாற்றத்தை எட்டியதாக கூறுகின்றனர். கடைசியாக 1950ல் இப்பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *