கனடா(Canada) ஒருபோதும் எந்த வகையிலும், வடிவத்திலும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்காது என்று கனடாவின் பிரதமர் மார்க் கார்னி(Mark Carney) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7ஆம் திகதி பதவியிலிருந்து விலகினார்.
தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடா நாட்டின் 24ஆவது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக மாற்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அந்நாட்டின் மீது வரிச் சுமைகளை ஏற்படுத்தி வரும் சூழலில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கருத்து தெரிவித்த மார்க் கார்னி,
“நாங்கள் தயாரிக்கும் பொருட்கள், நாங்கள் விற்கும் பொருட்கள் மற்றும் எங்கள் வாழ்வாதாரத்தின் மீது டொனால்ட ட்ரம்ப் நியாயமற்ற வரிகளை விதித்துள்ளார்.
கனேடிய குடும்பங்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைத் தாக்குகிறார். ஆனால் நாங்கள் அவரை வெற்றிபெற அனுமதிக்க முடியாது.
நாங்கள் போராட்டத்தைத் தொடங்கவில்லை, ஆனால் கனேடியர்களை யாராவது தொந்தரவு செய்தால், அந்த நபரை அவர்கள் சும்மா விடமாட்டார்கள்.
அமெரிக்கர்கள் நமது வளங்கள், நமது நீர், நமது நிலம், நமது நாட்டை விரும்புகிறார்கள். சற்று யோசித்துப் பாருங்கள். அவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் நம் வாழ்க்கை முறையையே அழித்துவிடுவார்கள்.
அமெரிக்கா கனடா அல்ல, அதேபோல கனடா ஒருபோதும் எந்த வகையிலும், வடிவத்திலும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்காது” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.