உலகம்

புதிய கனேடிய பிரதமர் யார் இந்த மார்க் கார்னி

கனடாவின்(Canada) 24ஆவது பிதமராக மார்க் கார்னி (Mark Carney) தேர்ந்தெடுக்கப்பட்டு  பதவியேற்றுள்ளார். 59 வயதான மார்க் கார்னியின் வாழ்க்கை மற்றும் அவரது அரசியல் பயணம், கனடாவின் அரசியல் வரலாற்றில் அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. தலைமைத்துவம், கனடாவின் பொருளாதார மற்றும் அரசியல் நிலையை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய அரசியல் பின்புலம் இல்லாத இவர் கனடாவின் பிரதமாரானது எப்படி, யார் இவர் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. கார்னி, கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் உள்ள தொலைதூர வடக்கு நகரமான ஃபோர்ட் ஸ்மித்தில் பிறந்துள்ளார். தாத்தா பாட்டிகளில் மூன்று பேர் அயர்லாந்தில் உள்ள கவுண்டி மேயோவைச் சேர்ந்தவர்கள் என்பதால், கார்னி ஐரிஷ் மற்றும் கனேடிய குடியுரிமை இரண்டையும் பெற்றுள்ளார்.

2018 இல் பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்றார், ஆனால் சமீபத்தில் கனேடிய பிரதமர் கனேடிய குடியுரிமையை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பதால் இந்த குடியுரிமையை கைவிட உள்ளதாக தெரிவித்திருந்தார். ஒரு உயர்நிலைப் பள்ளி முதல்வரின் மகனான அவர், உதவித்தொகையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார். அவர் மிகவும் கனேடிய விளையாட்டுகளான ஹாக்கி வீரராக இருந்துள்ளார்.

1995 ஆம் ஆண்டில், அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்(oxford university) பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அங்கு உள்நாட்டுப் போட்டி ஒரு பொருளாதாரத்தை தேசிய அளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்ற முடியுமா என்பது குறித்த தனது ஆய்வறிக்கையை எழுதியுள்ளார்.

அவருக்கு பொருளாதார துறையில் ஆழமான அறிவு மற்றும் அனுபவத்தை வழங்கியுள்ளது. 2003 ஆம் ஆண்டில், அவர் தனியார் துறையை விட்டு வெளியேறி கனடா வங்கியில் துணை ஆளுநராகச் சேர்ந்துள்ளார். பின்னர் நிதித் துறையில் மூத்த இணைத் துணை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2007 ஆம் ஆண்டில், உலகளாவிய சந்தைகள் சரிந்து, நாட்டை ஆழ்ந்த மந்தநிலைக்கு அனுப்புவதற்கு சற்று முன்பு, அவர் கனடா வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2007 முதல் 2013 வரை, கார்னி கனடா வங்கியின் 8வது ஆளுநராக பணியாற்றியுள்ளார். அந்த காலப்பகுதியில், உலக நிதி நெருக்கடியை சமாளிக்க அவர் எடுத்த நடவடிக்கைகள் கனடாவின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த உதவியுள்ளன. 2013 முதல் 2020 வரை, அவர் இங்கிலாந்து வங்கியின் ஆளுநராகவும் பணியாற்றிய அவர் இரு முக்கியமான மத்திய வங்கிகளை தலைமை தாங்கிய ஒரே நபராக காணப்படுகின்றார்.

கனடாவில் விலைவாசி உயர்ந்ததாலும் வீட்டு வசதி சார்ந்த பிரச்சனைகளாலும் அந்நாட்டு மக்களிடையே ட்ரூடோ மீதான ஆதரவு சரிந்தது. இதன் விளைவாக பதவியில் இருந்து விலகும் படி ட்ரூடோவுக்கு கட்சிக்குள் அழுத்தம் அதிகரித்தது. இதனால் கடந்த பத்தாண்டுகளாக கனடாவின் பிரதமராக பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) கடந்த ஜனவரி 7 ஆம் திகதி தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை ஜஸ்டின் ட்ரூடோ அந்த பதவியில் தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில், மார்க் கார்னி 85.9% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த வாக்கெடுப்பில் தனது போட்டியாளரான முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டை வீழ்த்தி, மார்க் கார்னி 85.9% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் சுமார் 1,600 கட்சி ஆதரவாளர்களுக்கு முன்னிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கே கார்னிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் வாக்களித்ததாக லிபரல் கட்சி தெரிவித்திருந்தது.

கனடாவின் 24ஆவது பிரதமராகவும் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டார். லிபரல் கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கவர்னர் மேரி சைமன் தலைமையில் நேற்றையதினம்(14) பிரதமராக பதவியேற்றுள்ளார். அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மே மாதத்தில் அங்கு தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக கார்னி, தற்காலிக பிரதமராகவே செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் சுமுகமான ஒரு உறவு காணப்படாத தற்போதைய நிலையில் இவரின் பிரதமர் பதவி சற்று சவாலானதாகவே காணப்படுகின்றது. பிரதமர் பதவியேற்பு விழா தலைமை உரையிலும் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடும் விதமாகவே தனது உரையை ஆற்றியுள்ளார். கனாடாவில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சமாளிக்க மிகவும் நம்பகமான அரசியல்வாதியாக நாட்டு மக்கள் அவரை அங்கீகரிப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *