இந்தியாஉலகம்

ஓமோன் நாட்டின் துறைமுகத்தில் சுமார் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன- அச்சத்தில் தமிழக நாடு!

நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1200 கோழிப் பண்ணைகளில் சுமார் 8 கோடி முட்டையின் கோழிகள் வளர்க்கப்பட்டு, தினம் தோறும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழ்நாடு, கேரளா பகுதிகளுக்கு தினமும் லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் ஓமான், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் தினமும் சராசரியாக 30 இலட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் உற்பத்தியாகும் 50 முதல் 52 கிராம் எடையுள்ள முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டு அரசு, முட்டை இறக்குமதியில் கடந்த நவம்பர் மாதம் புதிய கொள்கையை கொண்டு வந்து 60 கிராம் மற்றும் அதற்கு மேல் உள்ள எடைகளை கொண்ட முட்டைகள் மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என அறிவித்தது. இதனால் நாமக்கல்லில் இருந்து கத்தார் நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது கடந்த 2 மாதங்களாக தடைப்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் மாநிலங்களவையில் இதுகுறித்து பேசினார். இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக ஓமான் நாடும் இந்திய முட்டை இறக்குமதிக்கு புதிய அனுமதி அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஓமன் நாட்டிற்கும் நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்ய முடியாமல் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கப் பொருளாளர் திரு.கேசவன் நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது, “நாமக்கல்லில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மாலைத்தீவுகள் ஆகிய நாடுகளுக்கு மாதம்தோறும் சுமார் 150 கண்டெய்னர்களில் முட்டைகள் அனுப்பப்பட்டு வந்தன. கடந்த 2 மாதங்களாக முட்டை ஏற்றுமதி பாதியாக குறைந்துவிட்டது. மேலும், கத்தார் அரசு 60 கிராம் கொண்ட முட்டைகளை மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என அறிவித்துவிட்டது. இதன்தொடர்ச்சியாக ஓமான் நாட்டிலும், தேவைக்கு மட்டுமே இந்திய முட்டைகளை இறக்குமதி செய்வதாக அறிவித்து, முட்டை இறக்குமதிக்கான அனுமதியை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் ஓமான் நாட்டின் துறைமுகத்தில் கடந்த 10 நாட்களாக, நாமக்கல் முட்டைகள் 41 கண்டெய்னர்களில் சுமார் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. எனவே, இதுகுறித்து தகவல் அறிந்த பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பாராளுமன்றத்தில் பேசி, முட்டைகளை ஓமான் நாட்டிற்குள் அனுமதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கூறினார். இதன் காரணமாக மத்திய அரசு, ஓமான் நாட்டு அரசு துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக வருகின்ற 22-ம் தேதி 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, நாமக்கல் முட்டைகளை ஓமான் நாட்டில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கோழிப் பண்ணையாளர்கள், முட்டை ஏற்றுமதியாளர்கள் பொய்யான தகவலை நம்பி அச்சம் அடைய வேண்டாம். முட்டை தேக்கம் என்பது தற்காலிகமானது தான். விரைவில் இதற்கான தீர்வு கிடைத்துவிடும். வழக்கம்போல் நாமக்கல்லில் இருந்து கத்தார், ஓமான் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி தொடர்ந்து நடைபெறும்” என தெரிவித்தார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *