இலங்கை

நடவடிக்கை எடுக்காவிட்டால் உயிர் துறப்பேன் என அச்சுறுத்தும் யாழ் கூலித் தொழிலாளி!

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்த கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர் குழு அவரை கட்டிவைத்து தாக்கியிருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் தெரிவிக்கையில்,

உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு சென்ற நிலையில், தங்க நகை ஆபரணம் கீழே விழுந்து கிடப்பதை அவதானித்தேன். அதனை எடுத்து அந்த வெதுப்பகத்தில் ஒப்படைத்ததுடன் அதனை உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என கடந்த 24ஆம் திகதி கொடுத்தேன்.இதனையடுத்து இரண்டு நாட்கள் கடந்தபின் குறித்த வீதியில் செல்லும்போது வெதுப்பகத்திற்கு சென்று நான் வழங்கிய ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைத்தீர்களா என கேட்டபோது அவர்கள் இன்னும் ஒப்படைக்கவில்லை என கூறினர்.

மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து குறித்த வெதுப்பகத்திற்கு சென்று அது தொடர்பில் கேட்ட போது ஒப்படைக்கவில்லை என பதில் வழங்கினர். இந்நிலையில் குறித்த பொருளைத் தாருங்கள் ஏதாவது சிறுவர் இல்லத்திற்கு அதை வழங்குவோம் என கேட்டேன்.

இதன்போது வெதுப்பகத்தில் நின்ற இருவர் என் கழுத்தைப் பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து தாறுமாறாக தாக்கினர் . எனது கதறலை கேட்டு வீதியால் சென்ற சிலர் என் தரப்பு நியாயத்தை கேட்டு என்னை மீட்டனர்.

பின்பு வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் சென்றுவிட்டேன்.வைத்திய சாலையில்  இருந்து வீடு திரும்பியபின் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டேன். என்னை தாக்கியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை.

இந்நிலையில் பொலிஸ் நிலையம் வந்த சட்டத்தரணி ஒருவர் சமாதானமாக செல்லுங்கள் என கூறியதாக தெரிவித்த அவர், எனக்கு நியாயம் வேண்டும் என்னை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும், இல்லாவிட்டால் உயிர் மாய்ப்பேன் எனவும் தெரிவித்தார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *