பட்டிப்பளை பிரதேசத்தில் கிராம அலுவலர்களின் அதிரடி நடவடிக்கை

பட்டிப்பளை பிரதேசத்தில் கிராம அலுவலர்களின் அதிரடி நடவடிக்கை : பெருமளவான கசிப்பு உற்பத்தி கைப்பற்றப்பட்டு அழிப்பு!

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம சேவகர் பிரிவிலுள்ள காட்டுப்பகுதியில் கிராம உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் மூன்று கொள்கலன் சட்டவிரோத கசிப்பு நேற்று புதன்கிழமை (11) கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

தாந்தாமலையை அண்டிய கிராம சேவகர் பிரிவுகளில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக, காட்டுப்பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் 120,000 மில்லி லீட்டர் சட்டவிரோத கசிப்பு 03 கொள்கலன்களில் இருந்து கைப்பற்றப்பட்டது.

இப்பிரதேசத்தில் தமது துறைசார்ந்தும் ஏனைய சமூக பொதுப்பணித் துறைசார்ந்தும் முன்மாதிரியான பல மக்கள் சேவைகள் மூலம் நன்கு அறியப்பட்ட குறித்த கிராம சேவகர்களின் துணிச்சலான இந்நடவடிக்கையை அப்பிரதேச மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

1963 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி வர்த்தமானிக்கு வெளியீட்டுக்கு அமைவாக, மதுவரி கட்டளைச் சட்டம் 33,35 மற்றும் 48 அ பிரிவின் சட்டத்தின்படி கிராம உத்தியோகத்தர்களால் இப்பணி மேற்கொள்ளப்பட்டதாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தின் போது, சந்தேக நபர்கள் அவ்விடயத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் எனவும், கைப்பற்றப்பட்ட கசிப்பு யாவும் அவ்விடத்தில் அழிக்கப்பட்டன எனவும் கிராம உத்தியோகத்தர்கள் மேலும் தெரிவித்தனர்.

Exit mobile version