கொலைகளை, ஊழல், மோசடிகளைச் செய்து நாட்டை அழித்த ராஜபக்சக்கள் இனிமேல் மீண்டெழவே முடியாது என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் கூறுகையில், “ராஜபக்சக்கள் அரசியலில் இருந்து தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள்.
அவர்களின் மொட்டுக் கட்சியை மக்கள் அடியோடு சிதைத்துவிட்டதோடு, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இனிமேல் மீண்டெழ முடியாது. ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்கு ஆசைப்பட்ட நாமல் ராஜபக்ச இறுதியில் தேசியப்பட்டியல் ஊடாகவே நாடாளுமன்றம் வந்தார்.
இன்று வெட்கம் இல்லாமல் வீரவசனம் பேசுகின்றார். சீனாவுக்குச் சென்று வந்த ஜனாதிபதி அநுரகுமாரவை விமர்சிப்பதற்கு நாமல் ராஜபக்சவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொலைகளை, ஊழல், மோசடிகளைச் செய்த நாமல் ராஜபக்ச இன்று நல்ல மனிதர் போல் வேடம் போட முயல்கின்றார். என்ன வேடம் போட்டாலும் ராஜபக்ச குடும்பத்தினரால் இனிமேல் மீண்டெழ முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.








