பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைத்ததிலிருந்தே அரசியலில் பரபரப்பான சூழல்தான் நிலவிவருகிறது. நான்கு பிரதமர்களை தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகி, முந்தைய பிரதமரான மிஷெல் பார்னியேர், சிறப்பு அரசியல் சாசன அதிகாரத்தைப் பயன்படுத்தி பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்க்கட்சியினர் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார்கள்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்ததால் பதவியிழக்க நேர்ந்தது. புதிய பிரதமரான ஃப்ரான்கோயிஸும், சிறப்பு அரசியல் சாசன அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
முந்தைய பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது போலவே தற்போது ஃப்ரான்கோயிஸ் அரசு மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால், பிரான்ஸ் அரசு தப்புமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
பிரான்சின் வலதுசாரி National Rally கட்சி, தாங்கள் நம்பிக்கையில்லாத் தீரமானத்தை ஆதரிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளது. பிரதமர் தலை தப்பும், ஆட்சி கவிழாது என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் நிறைவேறாததால் ஏற்பட்டுள்ள நிலையில்லாத்தன்மையால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு, ஏற்கனவே சுமார் 12 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இம்முறையும் பட்ஜெட் நிறைவேறவில்லையென்றால், அதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.