ஒன்லைன் மோசடி மூலம் புற்றுநோய் நோயாளிகளிடமிருந்து ரூ. 05 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்ததற்காக 3 நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர்கள் புற்றுநோய் நோயாளிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, சிகிச்சைக்கான நன்கொடைகளை சேகரிப்பதற்கு உதவுவதாகக் கூறி, வங்கிக் கணக்குகள் உட்பட தனிப்பட்ட விவரங்களைப் பெற்றுள்ளனர்.
அவர்கள் நோயாளிகளின் விவரங்களைப் பயன்படுத்தி போலி தேசிய அடையாள அட்டைகளை (NIC) உருவாக்கி, முன்னைய எண் தொலைந்துவிட்டதாகக் கூறி, புதிய சிம் கார்டுகளையும் பெற்றுள்ளனர். புற்றுநோய் நோயாளிகளின் அதே எண்களைக் கொண்ட சிம் கார்டுகளைப் பெற்ற பிறகு, அவர்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி ரூ.5 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளை தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மோசடி தொடர்பாக ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்களைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக புற்றுநோய் நோயாளிகள், இதுபோன்ற ஒன்லைன் மோசடிகள் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளனர். தெரியாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.