இலங்கை

மீண்டும் பொருளாதார நெருக்கடி ..! புதிய ஜனாதிபதி ஐ.தே.கவில்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணையாவிட்டாலும் பத்தாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாகவோ, அரசமைப்பு ரீதியாகவோ அல்லது பொருளாதார நெருக்கடியின் மூலமாகவோ இடம்பெறலாம், இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என கூறியுள்ளார்.

ஐ.தே.கவின் மகளிர் தின நிகழ்வு (08.03.2025) இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோது குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பெண்கள் தொடர்பான பிரகடனம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மாத்திரமின்றி நாட்டுக்குத் தேவையான பல்வேறு சட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்திச் சட்டம், ஊழல் எதிர்ப்புச் சட்டம், கடனை எவ்வாறு மீள செலுத்துவது என்பதற்கான தேசிய கொள்கை சட்டம் என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, சர்வதேச நிதி நிறுவனங்கள் அனைத்தும் பெண்களின் பங்கேற்புடனான அபிவிருத்தி திட்டங்களில் பணம் பாதுகாக்கப்படுவதாகக் குறிப்பிட்டனர். அந்த சட்டங்களில் பெண்களுக்கு பெருமளவில் முன்னுரிமையளிக்கப்பட்டிருந்தது. இவற்றில் மத்திய வங்கி சட்டமும் உள்ளடங்குகின்றது. இவற்றுக்குப் புறம்பாக செயற்பட முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சி ஒரேயொரு ஆசனத்தைப் பெற்ற போது அதன் அரசியல் பயணம் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த ஒரு ஆசனமே வங்குரோத்தடைந்திருந்த நாட்டை அதிலிருந்து மீட்டது என்பதை நினைவுபடுத்துகின்றேன். அந்த ஓர் ஆசனமும் இல்லையே இப்போது என்ன செய்வீர்கள் என்று என்னிடம் ஒருவர் கேட்டார். ஓர் ஆசனத்தை வைத்துக் கொண்டு ஜனாதிபதியானதைப் போன்று, ஆசனம் இன்றியும் ஜனாதிபதியாக முடியும் என்று நான் பதிலளித்தேன். தேசிய கொள்கை பொறிமுறையுடன் பயணிக்கக் கூடிய பாதை ஐ.தே.கவுக்குக் காணப்படுகின்றது.

ஓர் ஆசனம் கூட இல்லையே என்று பயப்படத் தேவையில்லை. சிறப்பாகச் செயற்பட்டால் 10ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியையும் ஐக்கிய தேசியக் கட்சியால் உருவாக்க முடியும். ஓர் ஆசனத்தைக் கொண்ட நாமும், 3 ஆசனங்களைக் கொண்டிருந்த ஜே.வி.பி.யும் ஜனாதிபதிகளைப் பெற்றோம். எம்மில் இருந்து பிரிந்து சென்று அதிக ஆசனங்களைக் கொண்டிருந்தவர்களால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் அது முடியாமல் போனது. அவர்களுடன் ஒன்றிணையாவிட்டாலும் 10ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியையும் ஐ.தே.க.வே உருவாக்கும். அது ஜனநாயக ரீதியிலோ, அரசமைப்பு ரீதியிலோ அல்லது பொருளாதார நெருக்கடியிலோ இடம்பெறலாம்.

அறிந்த வகையில் இந்த வருடத்தின் இறுதியில் நாட்டில் மீண்டும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். ஜே.வி.பி. கூறும் 77 ஆண்டு சாபத்தில் தேங்காய் 80 ரூபாவாகும். உப்பு பைக்கட் 100 ரூபா மாத்திரமே. ஆனால், இன்று தேங்காய் 230 ரூபா, உப்பு 280 ரூபா. 1977இல் ஜே.ஆர்.ஜயவர்தன அனைவருக்கும் மோட்டார் சைக்கிள் மற்றும் ஓட்டோ யுகத்தைத் தோற்றுவித்தார். இன்று ஓட்டோவின் விலை 20 இலட்சம் ரூபாவாகும். பாரதூரமான அவல நிலையை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *