இலங்கை

அநுர வெறும் வாய்ச்சொல் வீரர் மட்டுமே!

ஊழல், மோசடியாளர்கள் மாத்திரமின்றி குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கூட சட்டத்தின் முன் நிறுத்த முடியாது போயுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர் மாத்திரமே என்பது தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (13) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில், “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர் மாத்திரமே என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்சியைப் பொறுப்பேற்று இத்தனை மாதங்கள் கடந்துள்ள போதிலும், ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஒருவர் கூட இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. அதுவொரு புறம் இருக்கையில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கூட இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இரவு வேளைகளில் வீடு வீடாகச் சென்று அவரைத் தேடுகின்றனர். அதேபோன்று துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய செவ்வந்தி என்ற சந்தேகநபரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஊழல், மோசடிக்காரர்களைக் கைது செய்வதாகக் கூறியவர்களுக்கு இவ்வாறான சந்தேகநபர்களைக் கூட கைது செய்ய முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

மேலதிக வகுப்பொன்றில் மாணவன் ஒருவரைக் கொடூரமாகத் தாக்கிய ஆசிரியரும் தலைமறைவாகியுள்ளார். அனைத்தையும் புறந்தள்ளி 15ஆம் திகதி காலை குரங்குகளைப் பிடிக்குமாறு அரசு அறிவித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளால் அரசு கேலிக்குள்ளாகியுள்ளது. இது அரசின் இயலாமையின் வெளிப்பாடு என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், அவர் தலைமையிலான அரசும் தோற்றுப் போயுள்ளன. பொய்களால் ஏமாற்றமடைந்து அதிருப்தியிலுள்ள மக்களை அதிலிருந்து மீட்பதற்கான பணிகளைப் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றியைப் பெற்றுக்கொள்ளும் இயலுமையும் எமக்கு இருக்கின்றது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *