இலங்கை

எதிர்வரும் தினங்களில் டெங்கு அதிரிக்கும் சாத்தியம்- டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவிப்பு!

நாட்டில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து 15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 47, 599 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் சுமார் 3,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். சில நாட்களாக நிலவிவந்த மழையுடன் கூடிய வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக டெங்கு பரவல் அதிகரித்துள்ளமையை காணக் கூடியதாக உள்ளது. அதற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

டெங்கு பரவலைக் கருத்திற் கொண்டு 15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் (MOH) அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 23 ஆக உயர்வடைந்துள்ளது.

எதிர்வரும் தினங்களில் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதம் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன. கொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், காலி, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது.

முறையான கட்டுப்பாட்டு முறைகளால் மாத்திரமே டெங்கு பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆகையால் இது தொடர்பில் அதிகாரிகள் மாத்திரமல்லாது பொதுமக்களும் அவதானத்துடனும் கரிசனையுடனும் செயற்பட வேண்டும்.

வீட்டு சூழல், வழிப்பாட்டுத் தளங்கள், பாடசாலை வளாகம், வர்த்தக நிலையங்கள், கைவிடப்பட்ட காணிகள், கட்டிட நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களில் மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளிலேயே நுளம்புகள் அதிகளவில் பரவுகின்றன.

சூழலில் டெங்கு நுளம்புகள் பெருக்கக்கூடிய பகுதிகளை இனங்கண்டு அவற்றை இல்லாதொழித்து தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *