இந்தியா – இலங்கைக்கு நம்பகமான பங்காளி மற்றும் நம்பகமான நண்பர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே தெரிவித்துள்ளார். இந்தியாவின் 76வது குடியரசு தின நிகழ்வில் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவும் இலங்கையும் சக ஜனநாயக நாடுகள் மட்டுமல்ல, அவற்றின் பன்முகத்தன்மையை பகிர்ந்து கொள்கின்றன. அவை நாகரிக பங்காளிகள், வரலாறு, மொழி, மதம் மற்றும் நெறிமுறைகளையும் பகிர்ந்து கொள்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். இரண்டு நாடுகளின் எதிர்காலங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
புவியியல் அருகாமை இரண்டு நாடுகளையும் இயற்கையான நண்பர்களாக மாற்றியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரின் இல்லமான இந்தியா ஹவுஸில், பொறுப்பு உயர் ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை அணிவகுப்பையும் பார்வையிட்டார். நிகழ்வில் இலங்கை கடற்படை இசைக்குழுவின் பாடல்களும், உயர்ஸ்தானிகரின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.