யோஷிதவின் விசாரணையில் தகவல்கள்

#image_title

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பல தனிப்பட்ட தகவல்கள் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது வெளிப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரத்மலானை சிறிமல் உயன பகுதியில் 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வாங்கியது தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜனவரி 25 ஆம் திகதி பெலியத்த பகுதியில் கைது செய்யப்பட்ட பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது பல விடயங்கள் வெளிவந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பிலான நீதிமன்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நேரத்தில் கைவிலங்கு போடப்படவில்லை. ஆனால் சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபோது கைவிலங்கு போடப்பட்டிருந்தார். மேலதிக மன்றாடியார் நாயகம் திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் மேலும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்து, சந்தேக நபருக்கு எதிரான இந்த சட்ட நடவடிக்கை தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு அல்ல என்றும், பணமோசடியின் கீழ் அவருக்கு எதிராக வேறு பல வழக்குகள் உள்ளன என்றும் கூறியுள்ளார். விசாரணை அதிகாரிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின்படி, கேள்விக்குரிய சொத்தின் பெயரளவிலான உரிமையாளர் டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண் என்றும், அவர் சந்தேக நபரின் உறவினர்(பாட்டி) என்றும் கூறப்பட்டுள்ளது.

2012 வரை அவருக்கு அசையா சொத்து எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு ஒரு மருத்துவமனையில் 275 மாத சம்பளத்திற்கு சமையலறை பராமரிப்பாளராக பணிபுரிந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. டெய்சி ஃபோரஸ்ட் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மற்றைய அறிக்கையின்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உறவினரான பாலித கமகேயின் குடும்ப உறுப்பினர் ஒருவரால் இந்த சொத்தை வாங்குவதற்காக 24 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பாலித கமகே இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, சாலை மேம்பாட்டு குத்தகையை பெறுவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் பணிபுரிந்த, ஒருவருக்கு 12.5 மில்லியன் ரூபாய் இலஞ்சமாக வழங்கியதாகக் விசாரணையின் போது கூறியுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு முக்கியமான விடயமாக, பரிவர்த்தனையின் போது, ​​யோஷித ராஜபக்ச யசாரா அபேநாயக்க என்ற இளம் பெண்ணுடன் காதல் உறவில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சாட்சியமளித்த யாசாராவின் மாமாவான வசந்த ஜெயசூரிய, சொத்தை தாம் வாங்கத் தயாராக இருப்பதாகக் முன்னதாக கூறியுள்ளார்.

யாசரவும் யோஷிதவும் திருமணம் செய்து கொண்ட பிறகு, குடியேற ஒரு வீடு தேவை என்று கூறி சொத்தை தனக்கு வழங்குமாறு யோஷித ராஜபக்ச கோரியுள்ளார். சம்பந்தப்பட்ட சொத்தின் பத்திரத்தைப் பெற யோஷித ராஜபக்ச ஒரு பாதுகாப்பு அதிகாரி மூலம் 34 மில்லியன் ரூபாயை அனுப்பியதாக வசந்த ஜெயசூரிய கூறியுள்ளார். யோஷித 2007 இல் கடற்படையில் சேர்ந்துள்ளார். பின்னர் லெப்டினன்ட்டாக உயர்வு பெற்றுள்ளார். 2016 இல் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படும் வரை அந்தப் பதவியில் பணியாற்றினார் என்று மன்றாடியார் நாயகம் மேலும்நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

அவரது மாத சம்பளம் 73,000 ரூபாய் ஆகும், மேலும் அந்தத் தொகை ஒருபோதும் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, தெஹிவளை பகுதியில் டெய்சி ஃபோரஸ்ட் பெயரில் 500 இலட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட மற்றொரு நிலம் தொடர்பாகவும் வழக்கு இதன்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த நிலம் பெறுமதி வாய்ந்த இரத்தினக் கற்களை விற்று வாங்கப்பட்டதாக மேல் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகளின் பின்னர், யோஷிதவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். வழக்கின் முதல் சந்தேக நபரான டெய்சி ஃபாரெஸ்ட் 2016 இல் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். வழக்கு கோப்பு 2017 இல் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

உண்மைகளை பரிசீலித்த பின்னர், மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க தனது உத்தரவை அறிவிக்கும் போது, ​​வழக்கு ஏற்கனவே எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதால், சந்தேக நபரை மேலும் விசாரணைக்காக தடுத்து வைக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ளார். பணமோசடி சட்டத்தின் கீழ் ஒரு வழக்கில் முதலில் செய்ய வேண்டியது கேள்விக்குரிய சொத்தை முடக்குவதுதான் என்றாலும், அது இதுவரை நடக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சந்தேக நபரான யோஷித ராஜபக்சவை தலா 500 இட்சம் ரூபா பிணைகளில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது வெளிநாட்டு பயணத்தை தடை செய்யவும், சாட்சிகளின் தொடர்பிலும் நீதிமன்றத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு மே 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Exit mobile version