சந்திரிக்கா – மைத்திரி – மகிந்தவுக்கு தனி சட்டம் கிடையாது!

#image_title

கடிதம் மூலம் அறிவித்தால் தான் அரசாங்கத்துக்கு சொந்தமான இல்லங்களிலிருந்து வெளியேறுவதாக முன்னாள் ஜனாதிபதிகள் குறிப்பிடுவது வகித்த ‘நிறைவேற்றதிகார ஜனாதிபதி’ என்ற பதவிக்கு பொறுத்தமானதல்ல என அரசாங்க தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய , ரணில் மற்றும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கு ஒரு சட்டமும், சந்திரிகா , மைத்திரிபால மற்றும் மகிந்த பிரிதொரு சட்டமும் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவால் குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகள் வசிக்கும் இல்லங்கள் தொடர்பில் அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் வெறுமனே ஊடகப் பிரசாரத்துக்கானவை மாத்திரமல்ல.

பல்வேறு தகவல்களை நாம் தற்போது முன்வைத்திருக்கின்றோம். அதற்கமைய இல்லங்களிலிருந்து வெளியேறுமாறு நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பல சந்தர்ப்பங்களில் நாம் அறிவித்துவிட்டோம். இதற்கு முன்னர் இல்லத்தைப் பயன்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாச அதனை ஒப்படைத்துவிட்டுச் சென்றார். கோட்டாபய ராஜபக்சவும் அவ்வாறே செயற்பட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைப் பயன்படுத்தியிருக்கவில்லை. இவர்களும் முன்னாள் ஜனாதிபதிகளே.

அவர்களுக்கொரு சட்டம், இவர்களுக்கொரு சட்டம் இல்லை. மைத்திரிபால சிறிசேனவின் இல்லம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பில் உத்தியோகபூர்வ இல்லம் என்றால் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு அவர்கள் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும். 2021இல் அதிகாரம் கிடைத்த பின்னர் ஓய்வு பெற்றதன் பின்னர் வசிப்பதற்காகவென சுமார் 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிக அரச செலவில் குறித்த இல்லம் புனரமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த இல்லத்தை நிர்வகித்துச் செல்வது அரசாங்கத்துக்கு பெரும் சுமையாகும். விரைவில் இந்த இல்லத்திலிருந்து மகிந்த வெளியேறுவார் என்று எதிர்பார்க்கின்றோம். கடிதம் அனுப்பினால் தான் வெளியேறுவோம் என்றும் சிலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். சாதாரண மக்கள் அல்ல. முன்னாள் ஜனாதிபதிகளாவர். எனவே இவர்கள் இவ்வாறு செயற்படுவது அவர்கள் வகித்த பதவிக்கு தகுதியானதல்ல’’ என்றார்.

Exit mobile version