விடுதலைப் புலிகளின் தலைவரை உயிருடன் கொண்டு செல்ல முற்பட்ட மேற்குலகம்!

#image_title

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல மேற்குலக நாடுகள் முற்பட்டன. மகிந்த இடமளிக்கவில்லை. மேற்குலகைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த போரை முடிப்பதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கினார் என்று சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் குறிப்பிடுகையில், மேற்குலக நாடுகளைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டுவந்தார். போர் முடிவடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வந்தனர். அமெரிக்காவில் இருந்தும் குழுவொன்று வந்தது. போரை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தினர். பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல முயற்சித்தனர். கோரிக்கைக்குச் செவிமடுக்காமல் மகிந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

1987 வடமராட்சி சமரின்போது இந்தியா பருப்புப் போட்டவேளை(அந்த காலத்தில், அத்தியாவசியப் பொருட்களை விமானத்தின் வழியாக மக்களுக்கு வழங்கினர்.  இதில் பருப்பு அதிகமாக வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது), ஜே.ஆர். ஜயவர்தன போரை நிறுத்தினார். போரை நிறுத்தி இருக்காவிட்டால் 4, 5 நாட்களில் போர் முடிந்திருக்கும். வெளிநாடுகளுக்குப் பணிந்து அன்று போரை நிறுத்தினர். மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை. மேற்குலகைப் பகைத்துக்கொண்டு போரை முடிக்க அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார்.

மகிந்தவுடன் மேற்குலகம் பகையாக உள்ளது. தமிழ்ப் பிரிவினைவாத டயஸ்போராக்களும் அவர்மீது பகை வைத்துள்ளனர். இதனால் மகிந்தவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version