யாழ். (Jaffna) தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரையில் தமிழர்கள் கைவைக்க இடமளிக்கமாட்டோம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். தையிட்டி காணி விவகாரம் குறித்து பௌர்ணமி நாளன்று காணி உரிமையாளர்கள் போராட்டம் முன்னெடுக்க உள்ளனர் ஜனாதிபதி அநுர கூறியது போன்று சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால் தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) உள்ளிட்ட அரசியல்வாதிகள் குரல் எழுப்பிவரும் நிலையில் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மேலும் கூறுகையில், “யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை சிங்கள – பௌத்தர்களுக்குச் சொந்தமானது. விகாரை அமைந்துள்ள காணியும் விகாரை நிர்வாகத்துக்கே உரித்தானது. இந்த விவகாரம் தொடர்பில் கதைப்பதற்குத் தமிழ் மக்களுக்கும், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எந்த அருகதையும் கிடையாது.
தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரையை இடிக்க வேண்டும் என்று கூச்சலிடும் அரசியல்வாதிகளுக்கு விடயங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். விகாரையில் தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம். விகாரைக்கு எதிராகப் பௌர்ணமி தினத்தன்று தமிழர்கள் போராட்டம் நடத்தி எம்மை மிரட்ட முடியாது. – என்றார்.