ரஷ்யாவின் தூர கிழக்கில் சீனாவின் சரக்கு கப்பல் தரை தட்டி விபத்துக்குள்ளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் சக்கலின்(Sakhalin) தீவு கடற்கரையில், நெவெல்ஸ்க்(Nevelsk) மாவட்டத்திற்கு அருகில், “ஆன் யாங் 2”(An Yang 2) சீன சரக்குக் கப்பல் தரை தட்டி விபத்துக்குள்ளானது.
அப்பகுதியில் உள்ளூர் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கிரெம்ளின் ஊடகங்கள் உட்பட ரஷ்ய ஊடகங்கள் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளன. கப்பலில் கணிசமாக 1,000 டன் நிலக்கரி, 700 டன் எரிபொருள் எண்ணெய் 100 டன் டீசல் ஆகிய சரக்குகள் இருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கடுமையான புயல் நிலவியதால் சீன சரக்கு கப்பல் தரை தட்டியதாக கூறப்படுகிறது. கப்பலில் நிலக்கரி, எரிபொருள் எண்ணெய் மற்றும் மோட்டார் எண்ணெய் ஆகியவை இருந்ததாக பிராந்திய அரசாங்க செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
எரிபொருள் எண்ணெய் மற்றும் டீசல் சரக்கு இருந்தபோதிலும், எரிபொருள் கசிவு எதுவும் கண்டறியப்படவில்லை என்று பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவைச் சேர்ந்த அனைத்து 20 கப்பல் மாலுமிகளும் பத்திரமாக உள்ளனர். தேவையான உணவு மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் மருத்துவ உதவி எதுவும் தேவைப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.