நாடாளுமன்றத்தில் (27) வெளியிடப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணச் செலவுகளை நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர (Dilith Jayaweera) சவாலுக்கு உட்படுத்தியுள்ளார். அந்த புள்ளிவிபரங்கள் நடைமுறைக்கு மாறானவை என்றும் அவர் கூறியுள்ளார் .
ஜனாதிபதிகளின் வெளிநாட்டு செலவீனங்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், ஜனாதிபதி பயணச் செலவுகளில் கூர்மையான வீழ்ச்சியைக் காட்டும் வகையில், அநுர வெறும் 1.8 மில்லியன் ரூபாயில் மூன்று நாடுகளுக்கு எவ்வாறு பயணம் செய்ய முடிந்தது என்று வினவினார். வெளிநாட்டு பயணச் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறுகிறார். குறைந்த தொகையுடன் மூன்று நாடுகளுக்கு அவர் எப்படி பயணம் செய்தார் என்று தமக்கு தெரியவில்லை.
மிதி பலகையில் பயணம் செய்தாலும் கூட, குறைந்த செலவில் பயணம் மேற்கொண்டிருக்க முடியாது என திலித் ஜெயவீர குறிப்பிட்டார். ஐந்து மாதங்களாக பதவியில் இருக்கும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு இராட்சியம் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்தார்.
செலவுகளைக் குறைப்பது மட்டும் இலாபத்தை ஈட்டாது என்று குறிப்பிட்ட ஜெயவீர, வருமானம் ஈட்டுவதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். பாதீட்டு பற்றாக்குறையை எவ்வாறு சமன் செய்வது, நமது கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவோம் என்பன தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், நாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டார்.