சினிமா

யார் இந்த `டிராகன்’ கயடு லோகர்?

`டிராகன்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கயடு லோகர்தான் தற்போதைய சோசியல் மீடியா சென்ஷேஷன்! தமிழில் அறிமுகமாகும் திரைப்படத்திலேயே மக்களிடையே ஆழமாக தன்னை பதிவு செய்து பல இளைஞர்களின் க்ரஷ் லிஸ்டிலும் இடம் பிடித்திருக்கிறார் கயடு லோகர். தமிழ் மக்களின் அன்பு அவரை நெகிழச் செய்வதாக சமீபத்திய பேட்டி ஒன்றிலும் குறிப்பிட்டிருந்தார். `டிராகன்’ திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு வெளியான டிரைலர், படத்தின் பாடலுக்கு இவர் நடனமாடி சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டக் காணொளி என விஷயங்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஃபேவரிட்டாக்கியது. பட ரிலீஸுக்குப் பிறகு கோலிவுட்டின் புதிய க்ரஷாக உருவெடுத்திருக்கும் இந்த கயடு லோகர் யார்?

கயடு லோகர் அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள டெஸ்பூர் என்ற நகரத்தைச் சேர்ந்தவர். கல்லூரியில் பி.காம் படிப்பை முடித்தப் பிறகு இவருக்கு மாடலிங் பக்கமும் ஆசை வந்திருக்கிறது. முதலில் மாடலிங் பக்கம் கவனம் செலுத்தி வந்தவருக்கு நல்ல அடையாளமும் கிடைத்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் `Everyuth Fresh Face’ என்ற நிகழ்ச்சியின் 12-வது சீசனின் டைட்டிலையும் வென்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சி பலரின் சினிமா கனவுக்கு முதல் புள்ளியாக இருந்திருக்கிறது. அந்த வரிசையில் கயடு லோகரின் சினிமா பயணத்தை தொடங்கி வைத்ததும் நிகழ்ச்சிதான். அடையாளத்திற்குப் பிறகு 2021-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானர் கயடு. அவர் `முகில்பேடே’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இத்திரைப்படம் வெளியாகி ஓராண்டிற்குள்ளாகவே மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து வலம் வரத் தொடங்கினார்.

2022-ம் ஆண்டு `பத்தொன்பதாம் நூட்டாண்டு’ என்ற மலையாள திரைப்படம் வெளியானது. அதே ஆண்டு இவர் நடித்த `அல்லூரி’ என்ற தெலுங்கு திரைப்படமும் வெளியானது. இதுமட்டுமல்ல, மராத்தி பக்கமும் சென்று திரைப்படம் ஒன்றில் நடித்தார். ` ஐ ப்ரேம் யூ’ என்ற அந்த மராத்திய திரைப்படமும் 2023-ம் ஆண்டு வெளியானது. இப்படியான அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் அவருடைய ப்ரேக் மொமன்ட்டிற்காக காத்திருந்திருக்கிறார் கயடு. நேரத்தில்தான் கயடு லோகருக்கு தமிழ் சினிமாவிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அந்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்துக் கொண்டு தற்போது `டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்தாண்டு இந்த ஒரு ரிலீஸ் மட்டுமல்ல, கடந்த மாதம் வெளியான வினீத் ஸ்ரீனிவாசன், நிகிலா விமல் ஆகியோர் நடித்திருந்த `ஒரு ஜாதி ஜாதகம்’ என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்திருந்தார். `டிராகன்’ பட ரிலீஸுக்கு முன்பே `டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரனின் அதர்வா நடிப்பில் உருவாகும் `இதயம் முரளி’ படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு கமிட் செய்யப்பட்டிருக்கிறார் கயடு.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *