அணுசக்தி தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு சீனாவும் (China) ரஷ்யாவும் (Russia) ஆதரவு தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா (United States) இது தொடர்பாக விடுத்திருந்த கோரிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலே பேச்சுவார்த்தைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனச் சிரேஷ்ட சீன மற்றும் ரஷ்ய ராஜதந்திரிகள் வலியுறுத்தியுள்ளனர். பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகள் நீக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா (United Kingdom), பிரான்ஸ் (France) மற்றும் ஜேர்மனி (Germany) ஆகிய நாடுகளுக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் போது ஈரானுக்கு எதிரான சர்வதேச தடைகளை நீக்கத் தீர்மானிக்கப்பட்டது. பதிலாக ஈரான் தனது அணுசக்தி திட்டங்களைக் கட்டுப்படுத்த ஒப்புதலை அளித்திருந்தது.
2018 ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதியாக தமது முதலாவது பதவிக் காலத்தைப் பொறுப்பேற்று ஒரு வருடத்தில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். தற்போது அணுசக்தியினை அமைதியான முறையில் நன்மையான திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கான ஈரானின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனச் சீனாவும் ரஷ்யாவும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.