இலங்கை

ரணிலை லண்டனில் வைத்து கைது செய்ய முயற்சி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) ஜனவரி மாத இறுதியில் லண்டனுக்கு (London) விஜயம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், கைது உத்தரவை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் செயற்பட்டு வருவதாக வெளியாகியுள்ளது. குறித்த விடயமானது ஆங்கில இணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரியவந்துள்ளது.

1980களின் பிற்பகுதியில், குறிப்பாக பட்டலந்த சித்திரவதைக் கூடங்களுடன் தொடர்புடைய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் விக்ரமசிங்க ஈடுபட்டதாக அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. அவருக்கு எதிரான கைது உத்தரவுக்கான முயற்சி, உலகளாவிய அதிகார வரம்பு என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்று அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சித்திரவதை போன்ற கடுமையான சர்வதேச குற்றங்களை தனிநபர்கள், எங்கு மேற்கொண்டிருந்தாலும், இங்கிலாந்து உட்பட சில நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில், அவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதிக்கும் சட்டக் கோட்பாடாக இது அமைந்துள்ளது.

முன்னாள் சிலி சர்வாதிகாரி அகஸ்டோ பினோசேவின் வழக்குடன் இணையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியின் குற்றங்களுக்காக அவர் 1998 இல் லண்டனில் உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் கைது செய்யப்பட்டார். உலகத் தலைவர்களை அவர்களின் பதவிக்காலத்தில் செய்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களுக்குப் பொறுப்பேற்க வைப்பதில் இந்த உலகளாவிய அதிகார வரம்பு சட்டம் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புக்கு அருகிலுள்ள பியகம தொகுதியில் அமைந்துள்ள பட்டலந்த தடுப்பு மையம், இலங்கையின் 1987–1989 மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கிளர்ச்சியின் போது பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. அரசாங்கத்திற்கு எதிராக வன்முறை கிளர்ச்சியை வழிநடத்திய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் குழுவான ஜே.வி.பி.யுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவோரை தடுத்து வைக்க, விசாரிக்க மற்றும் சித்திரவதை செய்ய இலங்கை பொலிஸின் நாசவேலை எதிர்ப் பிரிவு, இந்த முகாமை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. குற்றச்சாட்டில் அப்போதைய அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க, தம்மீதான நேரடி குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *