ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையில், மூன்று மாதங்களில், வட கொரிய வீரர்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெயர் குறிப்பிட மறுத்துள்ள அந்த அதிகாரிகள் தெரிவிக்கையில், வட கொரியாவிலிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட 11,000 வீரர்களில், 4,000 பேர் போரில் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000 பேர்களில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், காணாமல் போனவர்கள் அல்லது பிடிபட்டவர்களும் அடங்குவர் என விளக்கமளித்துள்ளனர். ஆனால் ஜனவரி நடுப்பகுதியில் சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டால், வட கொரியர்களால் தாங்கிக்கொள்ள முடியாதவை என்றும் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு எங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதும், எப்போது, எந்த அளவிற்கு மாற்றப்படுவார்கள் என்பதும் கூட தெளிவாகத் தெரியவில்லை. ஜனாதிபதி புடினின் கூட்டாளியான கிம் ஜாங் உன்னுக்கு ஏற்பட்ட அசாதாரணமான பேரிழப்பை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுவதாகவே கூறுகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் உக்ரைன் இராணுவம் ரஷ்ய பிராந்தியமான குர்ஸ்க் மீது மின்னல் தாக்குதலை நடத்தியது.
கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை தக்க வைத்துக் கொள்ளும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், எதிர்கால அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பேரம் பேசும் பொருளாக அதைப் பயன்படுத்த மட்டுமே நோக்கம் இருப்பதாகவும் உக்ரைன் அரசாங்கம் அப்போது தெளிவுபடுத்தியது. அக்டோபரில் வட கொரிய இராணுவம் ரஷ்யாவிற்குள் களமிறங்கியதன் காரணமாக, குர்ஸ்கில் உக்ரைனின் ஆரம்பகால வெற்றிகள் படிப்படியாக பின்னுக்குத் தள்ளப்பட்டன. இருப்பினும் உக்ரைன் இன்னும் பல நூறு சதுர கிலோமீற்றர் ரஷ்ய பிரதேசத்தைத் தக்க வைத்துக் கொண்டு அதன் எதிரி துருப்புகளுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இப்படியான சூழலில், உக்ரைனின் உயர்மட்ட இராணுவத் தளபதி ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி இந்த வார தொடக்கத்தில் தெரிவிக்கையில், வட கொரிய வீரர்கள் முன் வரிசையில் உக்ரேனிய துருப்புகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனையாக இருப்பதாக எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.