இலங்கை

வடக்கினை நோக்கி படையெடுக்கும் புலம்பெயர் முதலீட்டாளர்கள்

தற்போதைய சூழலில் வடக்கு மாகாணத்தை நோக்கி புலம்பெயர் முதலீட்டாளர்கள் வருகை தருவதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். அவர்களை வரவேற்பதுடன் இன்னமும் அதிகமான முதலீடுகள் எமது மாகாணத்தை நோக்கி வரவேண்டும். அதன் ஊடாக எமது பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

15ஆவது ஆண்டாகவும் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

30 ஆண்டு காலப் போர் காரணமாக வடக்கு மாகாணம் பலவற்றை இழந்துள்ளது. தொழில்துறை, வேலைவாய்ப்பு என்பனவும் அதனுள் அடங்குகின்றன. பகுதியைப் பொறுத்தவரையில் அரசாங்க வேலை மாத்திரமே இருந்து வந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் 2009ஆம் ஆண்டிலிருந்து இங்கு முதலீடு செய்வதற்கு பலர் வந்தாலும் அவர்களில் பலர் திரும்பிச் சென்றுள்ளனர். பல்வேறு காரணங்களால் அவர்கள் முதலீடு செய்யவில்லை.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் சூழல் மாறியுள்ளது. முதலீட்டாளர்கள் இங்கு வருகின்றார்கள். புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாக முதலிட விரும்புகின்றனர். போருக்கு முன்னர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி விவசாய மற்றும் கடற்றொழில் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்குச் சென்றனவோ அதேபோல மீண்டும் நிலைமை ஏற்படும் சூழல் தெரிகின்றது.

விவசாய மற்றும் கடற்றொழில் உற்பத்திப் பொருட்களை பெறுமதி சேர் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் எமக்கு அதிகரிக்கின்றன. இதன் ஊடாக எமது பகுதியைச் சேர்ந்த பலர் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும். தொழில்நுட்பங்களை நவீன இயந்திரங்களையும் எமது உற்பத்திப் பொருட்களையும் பெருக்குவதற்குப் பயன்படுத்தவேண்டும். சகல வழிகளிலும் சாதகமான சூழல் நிலவும் நிலையில் அதனைப் பயன்படுத்தி எமது மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *