மின்சார சபை அடுத்த சில நாட்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மின் வெட்டு தொடர்பான கால அட்டவணையும் (10.02.2025) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு ஒவ்வொரு வலயங்களிலும் வெவ்வேறு நேரங்களில் மேற்கொள்ளப்படும். நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்றைய தினம் (09.02.2025) மின்தடை ஏற்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மின் நிலையத்தின் ஜெனரேட்டர்கள் கணினியுடன் இணைக்கப்படும் வரை மின்வெட்டை தொடர திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் நேற்று ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கு காரணம் கடந்த கால அரசாங்கங்கள் தான் என அரச தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி நேற்று (09) இரண்டு தடவைகள் மின் வெட்டு ஏற்பட்டிருந்தது.
நாட்டில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்தை நோக்கி குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து வருகின்றனர். மின்வெட்டுக்கு காரணம் மின்பிறப்பாக்கியில் பாய்ந்து உயிரை மாய்த்த குரங்கு தான் என அரசாங்கம் தெரிவித்திருந்தமை மக்களால் சமூக வலைத்தளங்களில் கேலிச்சித்திரங்களாகவும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.
பாணந்துறை உப மின் நிலையத்தில் குரங்கொன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. உப மின்நிலையத்தில் குரங்குகள் எவையும் மோதவில்லை என பாணந்துறை உப மின் நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.