தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுரவை நோக்கி கேள்வி கேட்ட போது அவர் வழங்கிய பதில் ஜனாதிபதியின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபாகுகதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “காணியில் உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல் தனிநபர் சட்டத்தை மீறி சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் நீதி வழங்குமாறு ஜனநாயக வழியில் போராடும் மக்களையும் அதற்கு ஆதரவு வழங்கும் மக்கள் பிரதிநிதிகளையும் பார்த்து மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்ட முயற்சிக்கின்றனர் என அப்பட்டமான பொய்யுரைக்கும் ஜனாதிபதி கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே தமிழர் தாயகப்பகுதியில் அரச சட்டவிரோத செயற்பாடுகளை மறைக்க முயற்சிக்கின்றார்.
இதுவரை அரச இயந்திரம் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளும் மத ஆக்கிரமிப்பு, இனவாத ஆக்கிரமிப்பு போன்றவற்றை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதி ஆதரிக்கின்றாரா? அரசாங்கம் தமிழர் தாயகத்தை இரண்டாக பிரித்து கிழக்கு மாகாணத்திற்கும் தமிழர்களுக்கம் தொடர்புகள் இல்லை என்ற உள்நோக்கில் மறைத்து வடக்கு மாகாணம் என்ற உரையாடலை முதன்மைப்படுத்துகின்றனர்.
சட்டவிரோத நடவடிக்கைக்கு நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக என்ன செய்வேன் என சொல்வதற்கு முதுகெலும்பற்று வடக்கு மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தீர்வு வழங்குவோம் என்பது வேடிக்கையாக உள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டத்தின் ஆட்சியை அரச இயந்திரத்தின் மூலம் வழங்கும் இயலுமையை ஜனாதிபதி வழங்க தயார் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.