முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வியாழன் (19) தினம் கரை ஒதுங்கிய மியன்மார் படகு (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
குறித்த படகில் பயணித்த 115 பயணிகளும் அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு குருதிமாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் கற்பிணித் தாய் ஒருவர் உட்பட 39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும், அடங்குகின்றனர்.
இவர்களை மாலை 3.00 மணியளவில் திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் விஜயம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டிருருந்தார்.
மாலை 4.30 மணிக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை ஐ.நா பாராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் இதனால் வாழமுடியாத சூழ்நிலையில் இலங்கை நாட்டுக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கின்றார்கள்.
இலங்கைக்கு வருகை தரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் வருகை தந்ததாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் ஒரு படகில் மற்றைய படகில் வந்த நபர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர். அத்துடன் வரும் வழியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் பசியினால் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அந்த குடும்பத்தில் ஒருசிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் எட்டு இலட்சம் ரூபாய் வழங்கி படகினை கொள்வனவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
Paristamilnews.com