இலங்கையில் மின்சாரக் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், உத்தியோகபூர்வமான அறிவிப்பு இல்லையென தகவல்கள் வெளியாகி உள்ளன. மின்சார கட்டணக் குறைப்பு தொடர்பான பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைகள் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ளதா என்பது தெரியாது என சபையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைத்தவுடன், நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய, மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னரே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
மின் கட்டண மறுசீரமைப்பு தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தகவல் வெளியிடுகையில்,
ஆணையத்தின் பரிந்துரைகள் நேற்று இலங்கை மின்சார சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான பரிந்துரைகள் குறித்து நிதியமைச்சகத்திடம் ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டார். 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் பிரிவு 30 இன் கீழ் மின்சாரக் கட்டணங்கள் நிர்வகிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அதற்கமைய, மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான யோசனை இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த திட்டம் தொடர்பான இறுதி முடிவை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு எடுக்கும். அந்த முறைமைக்கமைய, 2009 ஆம் ஆண்டு முதல் மின்சாரக் கட்டணங்கள் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.