உலகம்

ட்ரம்பால் பயம்… வெறிச்சோடிக்கிடக்கும் நகரமொன்றின் தெருக்கள்

வெளியே வந்தால் கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராததால், அமெரிக்க நகரமொன்றின் தெருக்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன. ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் முன் தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும் புலம்பெயர்தலுக்கெதிராக நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கூறியிருந்தார்.

அவர் பதவியேற்ற மறுநாளே, இல்லினாயிஸ் மாகாணத்திலுள்ள சிகாகோ நகரில் புலம்பெயர்தல் மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டுகள் நடத்தினார்கள், 956 பேர் கைது செய்யப்பட்டார்கள். இப்போது சிகாகோவில் வாழும் புலம்பெயர்ந்தோர், அவர்கள் சட்டப்படி ஆவணங்களுடன் வாழ்ந்தாலும் சரி, ஆவணங்கள் இல்லையென்றாலும் சரி, எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்துடனேயே காணப்படுகிறார்கள்.

அவர்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. அதனால், பல தெருக்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் காலியாக கிடக்கின்றன. புலம்பெயர்ந்தோருக்கு உதவிகள் செய்யும் சமுதாய மையம் ஒன்றின் வாசலில் ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்தல் அதிகாரிகள் வந்தால் என்ன செய்யவேண்டும் என சில ஆலோசனைகள் எழுதப்பட்டுள்ளன.

புலம்பெயர்தல் அதிகாரிகள் வந்தால் கதவைத் திறக்காதீர்கள், அமைதியாக இருங்கள், ஆவணத்திலும் கையெழுத்திடாதீர்கள் என்பது போன்ற விடயங்கள் எழுதப்பட்டுள்ளன. வழக்கமாக திறந்திருக்கும் அந்த மையத்தின் கதவு, தற்போது மூடியே வைக்கப்பட்டுள்ளது. அங்கு பணி செய்யும் தன்னார்வலர்கள், மையத்துக்கு காலையில் வந்ததும், முதல் வேலையாக எங்கேயாவது புலம்பெயர்தல் அதிகாரிகள் மறைந்திருக்கிறார்களா என கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுத்தான் வேலையையே துவங்குகிறார்கள்.

எங்களுக்குப் பயமாக இருக்கிறது, எங்கும் வதந்திகள் பரவிவருகின்றன, ஆகவே, எங்களைப் பிடித்து நாடுகடத்திவிடுவார்களோ என பயப்படுகிறோம், எங்களை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு என்ன ஆகுமோ என்ற பயத்தில் இருக்கிறோம் என்கிறார்கள் அந்த பகுதியில் வசிப்பவர்கள்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *