வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரக காரியாலயங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் காலத்தை நீடிக்கும் நடவடிக்கைகளை இணையம் ஊடாக விரைவாக மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
இணையம் ஊடாக விண்ணப்ப படிவம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்புவதும் விரல் அடையாளம் பெறுவதும் தூதரக காரியாலயங்களிலேயே மேற்கொள்ளப்படும். முதற்கட்ட நடவடிக்கையின் கீழ் 20 தூதரக காரியங்களில் இணையம் ஊடாக விண்ணப்பிக்கும் நடைமுறை செயற்படுத்தப்படவுள்ளது. ஏனைய தூதரக காரியாலயங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்தோர் தொடர்பான சர்வதேச அமைப்புக்கும், துறைசார் அமைச்சரான விஜித்த ஹேரத்திற்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. சந்திப்பு நேற்று முன்தினம் அமைச்சில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.