ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வாரங்கள்தான் ஆகிறது. தான் செய்வதாக வாக்களித்த பல விடயங்களை வேகவேகமாக நிறைவேற்றி வருகிறார் அவர். அவர் கூறிய ஒரு விடயத்தால், பிரித்தானிய இளவரசர் ஹரி, அவரது மனைவி மேகன் ஆகியோர் அச்சத்தில் இருக்கக்கூடும் என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
விசா விடயத்தில் இளவரசர் ஹரி பொய் சொன்னதாக நிரூபிக்கப்பட்டால், அவரை நாடுகடத்தும் அதிகாரம் ட்ரம்புக்கு உள்ளது. முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் ஹரியை காப்பாற்றுவதற்காக அவரது புலம்பெயர்தல் விண்ணப்பத்தின் ரகசியத்தைக் காத்துவருவதாக குற்றம் சாட்டியிருந்தார் ட்ரம்ப். நான் ஹரியைக் காப்பாற்றமாட்டேன், அவர் ராணிக்கு துரோகம் செய்துவிட்டார், அது மன்னிக்கமுடியாத விடயம், ஜோ பைடனுக்கு பதில் நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தால், ஹரியின் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும் என்று கூறியிருந்தார் ட்ரம்ப்.
தான் உறுதியளித்த விடயங்களை ஒவ்வொன்றாக ட்ரம்ப் நிறைவேற்றி வரும் நிலையில், ஹரியை நாடுகடத்துவதாக அவர் கூறியிருப்பதால், ஹரியும் மேகனும் கவலையில் ஆழ்ந்திருக்கலாம் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான ஜென்னி பாண்ட் என்பவர். சுயசரிதைப் புத்தகமான ஸ்பேர் என்னும் புத்தகத்தில், தான் பலவித போதைப்பொருட்களை சோதித்துப் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார் ஹரி.
அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கும் பட்சத்தில், அவருக்கு அமெரிக்காவில் வாழ விசா கொடுக்கப்பட்டிருக்கமுடியாது. அவர் விசா விண்ணப்பத்தில் தனது போதைப்பொருள் பயன்பாடு குறித்து பொய் சொன்னாரா என The Heritage Foundation என்னும் அமைப்பு கேள்வி எழுப்பிய விடயம் நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.