கோட்டபய கடிதம் இல்லாமல் இல்லத்தை விட்டு வெளியேற முடிந்தால், ஏன் மகிந்த ராஜபக்சவிற்கு (Mahinda Rajapaksa) முடியாது என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ (Nalinda Jayatissa) கேள்வியெழுப்பியுள்ளார். அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக மகிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு கோரினால், வெளியேற தயாராக இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவை தனது விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறுமாறு கோரி கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அதன்போது தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லம் குறித்த நீதிமன்றத் தீர்ப்பின் படி, ஒரு சட்டத்தரணியாக மகிந்த ராஜபக்ச நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது சகோதரர் கோட்டபய ராஜபக்சவிற்கு கடிதம் இல்லாமல் தனது இல்லத்தை விட்டு வெளியேறு முடியுமானால், இவர் ஏன் அதற்காகக் காத்திருக்கிறார் என அமைச்சர் கேள்வியேழுப்பியதோடு, முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது துணைவியார் இருவருக்கும் பொருத்தமான மாற்று வசிப்பிடத்தையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.