இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகளால் கூட நாடு இருளில் மூழ்கவில்லை…!

விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியை தீயிட்டு கொழுத்திய போது கூட, நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி(SJB) அநுர அரசை கடுமையாக சாடியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“ நாட்டில் ஏற்பட்ட மின்தடைக்கு மின்சக்தி அமைச்சர் குரங்குகள் மீது பழி சுமத்தினார். ஒரு குரங்கால் முழு நாட்டுக்கும் மின் துண்டிப்பை ஏற்படுத்த முடியுமா? அமைச்சரால் குறிப்பிடப்பட்ட இந்த கருத்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்னர் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளே இதற்கு காரணம் என்று அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்கங்களின் குறைக் கூறியே இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தற்போது ஆட்சியிலிருந்து கொண்டும் இதனையே கூறுகின்றனர்.

முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தியதாகக் கூறியவர்களின் இயலாமை தற்போது வெளிப்பட ஆரம்பித்துள்ளது. நுரைச்சோலை நிலக்கரி மின்உற்பத்தி நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கிகள் செயலிழந்தமையால் இந்நிலைமை ஏற்பட்டது எனக் கூறினர். கடந்த காலங்களில் நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த சந்தர்ப்பங்களில், அது தொழிற்சங்க மாபியாக்களின் செயல் என விமர்சித்தனர். அவ்வாறெனில் இந்த அரசாங்கத்துக்கும் அந்த மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதா?

சூரிய மின் உற்பத்தி களங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு அதிகம் என  இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் சங்கம் குறிப்பிடுகிறது. சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்திகள் பிரபலமாகும் பட்சத்தில் நிலக்கரி மற்றும் டீசல் மாபியாக்கள் பாதிக்கப்படும். எனவே அவற்றைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறான கதைகள் கூறப்படுகின்றன.

மாபியாக்களின் தேவைக்கேற்ப செயற்படுவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா? நுரைச்சோலை மின்பிறப்பாக்கிகள் செயலிழக்கப் போவதை அறிந்தே அரசாங்கம் அதற்கு இடமளித்திருக்கிறது. இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேடைகளில் வீர வசனம் பேசுவதை விட, நடைமுறையில் ஆட்சி செய்வது சிக்கல் என்பதை இப்போது ஜே.பி.வி. புரிந்து கொண்டிருக்கும். ஏனைய ஆட்சி காலங்களில் இவ்வாறு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதாகக் குறிப்பிட்டு வீதிக்கிறங்கியிருப்பர்.

ஆட்சி என்பதால் மௌனமாக இருக்கின்றனர். அளவுக்கதிகமாக மக்களை ஏமாற்ற முற்பட வேண்டாம். ராஜபக்சர்களை ஆட்சியில் அமர்த்தி, அவர்களை துறத்துவதற்கு மைத்திரிக்கு வாக்களித்து பின்னர் கோட்டாபயவை நாட்டை விட்டு ஓடச் செய்தவர்களே உங்களையும் ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *