புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் தகவல்களை வெளியிட்டுள்ளனர். கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகத் தலைவரை அளுத்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 5வது நீதிமன்ற அறையில் சாட்சிக் கூண்டில் வைத்து கொல்வதற்கு ஏற்பாடு செய்த கொலையாளி ஒன்றரை கோடி ரூபாய்க்கு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
துபாயில் இருந்து ஒப்பந்தத்தை கொடுத்த நபர், முன்பணமாக இரண்டு லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். கொலைக்குப் பிறகு அவர் கல்பிட்டி பகுதியில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் செல்லத் தயாராக இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், தேவையான பணத்தை தேட இதுபோன்ற பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒப்பந்தம் கொடுத்தவர்களே அவர் தப்பிப்பது குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுத்ததாகவும் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகள் கூறுகின்றன.
புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யப்பட்டபோது, வழக்கறிஞர் என்று கூறி வழக்கறிஞர் அடையாள அட்டையையும் பொலிஸாருக்கு காட்டியுள்ளார். அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்குப் பிறகு அவரைக் கைது செய்துள்ளனர். நேற்றையதினம் காலை வழக்கு ஒன்றுக்காக கனேமுல்ல சஞ்சீவ நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.