இலங்கை

அநுர தரப்பிற்கு எதிராக விரைவில் மக்கள் அலை!

வரவிருக்கும் மக்கள் எதிர்ப்பினை எதிர்கொள்வதற்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை பெற தயாராகுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் ,தேசிய பாதுகாப்பு தொடர்பான வகுப்பிற்கு கதிரையொன்றை எடுத்து வருமாறு அன்று ஜே.வி.பி. அழைப்பு விடுத்தது. அவர்களது அரசாங்கத்தில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை சுட்டுக் கொன்று தப்பிச் செல்லுமளவுக்கு நீங்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்கின்றீர்களா என்று கேட்க விரும்புகின்றோம். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் மீது தான் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அரசாங்கம் இதனை நியாயப்படுத்த முனையலாம்.

துப்பாக்கிதாரியின் குறி தவறி வேறு எவரேனும் கொல்லப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும். அதற்கான பொறுப்பை யார் ஏற்பார்கள். 72 ஆண்டு சாபம் தொடர்பில் இந்த அரசாங்கம் இதற்கு முன்னர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருந்தது. சாபம் யாருக்கு என்பது தெளிவாகத் தெரிகிறது. பாதையில் தந்தையும் மகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு விலங்குகளைப் போன்று மனிதர்கள் சுட்டுக் கொல்லப்படுமளவுக்கு தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளது.

இனிவரும் நாட்களில் மக்களின் எதிர்ப்புக்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். மேற்குலக நாடுகளில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் துறைசார் அமைச்சர் பதவி விலகியிருப்பர். ஆனால் இவர்கள் கூச்சமின்றி ஊடகங்களுக்கு கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்மையும், எமது வாகனத்தையும், நாம் கொண்டு செல்லும் கோப்புக்களையும் பரிசோதித்த பின்னரே நாடாளுமன்றத்திற்குள் செல்ல அனுமதிக்கின்றனர். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை அழைத்து வரும் நீதிமன்ற கட்டடத்தொகுதிக்குள் நுழைபவர்கள் எவ்வாறு எவ்வித பரிசோதனையும் இன்றி நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

24 மணித்தியாலங்களுக்குள் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டு விட்டதாக பெருமை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களது இயலாமையால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு வகுப்பிற்கு கதிரையொன்றை எடுத்து வருமாறு எமக்கு அழைப்பு விடுத்த இந்த அரசாங்கத்தை விரைவில் மக்கள் வீதியில் நிறுத்துவர் என்றார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *