கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும், நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடிய அனைத்து கடல் வழிகள் மற்றும் விமான நிலைய வழிகளும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தலைமறைவாகியுள்ள இஷாரா , கடுவெல பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து கொலைக்குத் தேவையான துப்பாக்கியை, துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு வழங்கியுள்ளார். நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளில், சந்தேக நபரின் தாயார் மற்றும் சகோதரருக்கும் இந்தக் கொலை குறித்துத் தெரியும் எனவும், அதற்கு முன்னர் அவர்கள் இது தொடர்பாக தொலைபேசி உரையாடல்களை பரிமாறிக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபரின் தாயார் மற்றும் சகோதரரை குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று இரவு கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளார். பிரதான சந்தேக நபரான இஷார செவ்வந்தி, ஹெராயின் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.