இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறித்து அதிர்ச்சி தகவல்!

வதிவிட பயிற்சி வழங்காமல் வீட்டுப் பணிப்பெண்கள் 28,186 பேர் முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளதால் 631,177,650 ரூபாய் வருமானத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீரவின் தலைமையில் கூடிய போதே விடயங்கள் தெரியவந்துள்ளன.

கோப் குழு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்ந்துள்ளது. ஒழுங்குறுத்தும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஒரு வணிக வடிவத்தில் பணியாற்றியுள்ளமை தெளிவாகியுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நிறுவனத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும்போது இந்த விடயங்கள் தெளிவாவதாக இருப்பதாக கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது. வதிவிட பயிற்சி வழங்காமல் வீட்டுப் பணிப்பெண்கள் 28,186 பேர் முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளதால் 631,177,650 ரூபாய் வருமானத்தை பணியகம் இழந்துள்ளமை புலப்பட்டுள்ளது.

22410 ரூபாய் கட்டணம் அறவிட்டு 28 நாட்கள் வதிவிடப் பயிற்சி வழங்கியிருக்க வேண்டி இருந்தாலும், இந்தப் பயிற்சி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது புலப்பட்டது. பயிற்சிக்கு பதிலாக மூன்று மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு ஒரு நாளைக்கு சுமார் 390 பேருக்கு நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளமை இங்கு தெரியவந்துள்ளது.

நேர்முகப்பரீட்சையும் வீடியோ ஒன்றைப் பார்ப்பதன் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதனால் 2023 மே மாதம் முதல் 2024 ஜூன் வரை வயதில் குறைந்தவர்கள் 683 பேர் வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *