இலங்கை

இலங்கைக்கான USAID உதவித் தொகை 90 வீதத்தினால் குறைவு

யூ.எஸ்.எயிட் (USAID) நிறுவனத்தினால்  இலங்கைக்கு வழங்கும் நிதியுதவி ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு 90% குறைக்கப்படும் என அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கும் பல அரச சார்பற்ற அமைப்புகளுக்கும் (NGO) கிடைக்கும் நிதியுதவிகள் கணிசமாக குறையும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உதவிகளால் செயல்பட்ட நான்கு முக்கிய அரசுத் திட்டங்கள் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 2024ஆம் ஆண்டில் மட்டும் USAID நிறுவனத்தினால் 21 பில்லியன் ரூபா மதிப்புள்ள திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இத்தீர்மானத்தால், இலங்கைக்கான உதவித் திட்டங்கள் தடைப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முடிவை மீளாய்வு செய்யுமாறு USAID இலங்கைக்கான பிரதிநிதியுடன் கலந்துரையாட முயன்றதாகவும், ஆனால் இதுவரை எந்த பதிலும் பெறப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 60 பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட வளர்ச்சிப் பணிக்காக வழங்கப்பட்ட USAID நிதி 90% குறைக்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

USAID நிதியில் செயல்படும் திட்டங்களை நிறுத்துமாறு அமெரிக்க அரசுத்துறை இலங்கையின் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனுப்பியுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் (National Peace Council) நிர்வாக இயக்குநர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார். USAID நிதி குறைவதால், சில அரசசார்பற்ற நிறுவனங்கள் ஐரோப்பிய தூதரகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *