இலங்கை

நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்காக சுமந்திரன் விளக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கினால், கடந்த பொதுத் தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வருவேன் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எங்களுடைய கட்சியில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் நான் இருக்கின்றேன்.

எங்களுடைய கட்சிக்கு இந்தத் தடவை ஓர் ஆசனம் கிடைத்த காரணத்தினால் மட்டும்தான் நான் நாடாளுமன்றத்தில் பிரதிநிதியாக இருக்கவில்லை. கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்திருந்தால் நானும் இந்த நாடாளுமன்றத்தில் இருந்திருப்பேன்.

நாடாளுமன்றத் தேர்தல் முறைமையின்படி எமது கட்சியில் முதலாவது இடத்தைப் பெற்ற சிவஞானம் சிறீதரன் ஏதாவது காரணத்துக்காக பதவி விலகினால், எவரும் எதுவும் சொல்லாமலே நான்தான் நாடாளுமன்ற உறுப்பினராக வருவேன். அதில் எந்தத் தவறும் கிடையாது. தனது பதவி விலகல் தொடர்பில் சிறீதரன் கோடிட்டு காட்டியும் இருக்கின்றார். அதாவது மாகாண சபைத் தேர்தல் வருகின்றது என்றும் அரசியல் குழுக் கூட்டத்தில் அவர் கோடிட்டு காட்டிச் சொல்லியிருந்தார்.

அது வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கானதாகவும் இருக்கலாம். ஆனால், அப்படி அவர் நேரடியாகச் சொல்லவில்லை. மேலும், மாகாண சபைத் தேர்தல் வருகின்றதால் அந்த வேளையில் சில மாற்றங்களும் நிகழலாம் என்றும், சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வரலாம் என்றும் சிறீதரன் சொல்லியிருந்தார். அதை இப்போது நான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றதென்றல்ல. இப்போது நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால் ஒரு மாவட்டத்தில் அடுத்த ஸ்தானத்தில் இருக்கின்ற ஒருவருக்கு எந்த வேளையிலும் நாடாளுமன்றத்துக்குச் செல்லுகின்ற ஒரு தேவை ஏற்படலாம்.

அப்படி ஒன்று வந்தால் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வருவேன். அதில் எனக்கு எந்த மறுப்பும் கிடையாது. தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் நான் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கின்றமையால் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் செல்வது முறையற்றது என்பது நீண்டகால நிலைப்பாடாகும்” எனக் கூறியுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *