இலங்கை

புற்றுநோய் சிகிச்சை தொடர்பில் வடக்கில் நடவடிக்கை

வடக்கு பகுதியை வதிவிடமாக புற்றுநோயாளர்கள் சிகிச்சைக்காக கொழும்புக்கு சென்று மருத்துவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தற்போது தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்கு சென்று வருகையில் தமது நலிவுத் தன்மை காரணமாகவும் அல்லது பிரயாணக் கஷ்டம் மற்றும் பணவசதிக் குறைவு காரணமாகவும் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சிகிச்சையைத் தொடர்வதற்காக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

விருப்பில் சிகிச்சையைத் தொடர தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு செல்லுகையில் அங்கு சிகிச்சை மறுக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களும் எழுந்திருந்தன. புற்றுநோயாளர்கள், மனித உரிமை ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சு, வெகுஜன ஊடகங்களூடாகவும் முறைப்பாடுகளை முன்வைத்து கடந்த ஒரு வருடமாக தீர்வுக்காக காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்று புற்று நோயாளர்களின் நலன்கள் பூரணமாக பேணப்படும் முறையிலான முடிவுகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பில் சிகிச்சை பெற்று வருகையில் நோயாளர்கள் தமது சிகிச்சையை யாழில் தொடர விரும்புமிடத்து தாம் பெற்ற சிகிச்சை தொடர்பான சகல விபரங்களையும் கடிதத்துடன் எடுத்து சென்று, தெல்லிப்பளையில் அங்கு உள்ள மருத்துவ மற்றும் கதிர்வீச்சு வசதிகளுடன் அங்கு சேவையாற்றும் புற்றுநோய் நிபுணர்களின் தீர்மானத்துடன் சிகிச்சை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அவர்கள் எவ்வித காரணத்துக்காகவும் திருப்பி அனுப்பப் படமாட்டார்கள் எனவும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *