வசதி குறைந்த பாடசாலைகளின் ஆய்வுகூடங்களுக்கான உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் மேம்பாட்டுச் சங்கம் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
பிரயோக ரீதியான விஞ்ஞான பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான இரசாயன பதார்த்தங்கள் மற்றும் உபகரணங்கள் உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன. இலங்கை அறிவியல் மேம்பாட்டுச் சங்கத்தின் இவ்வருடத்திற்கான “அறிவியல் மற்றும் தொழினுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் வசதி குறைவானவர்களை வலுப்படுத்துதல்” எனும் தொனிப்பொருளினூடாக ஆய்வுகூட உதவித் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.
பிரயோக ரீதியான விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளும்போது சவால்களை எதிர்கொண்டுள்ள பாடசாலைகளுக்கு இந்த உதவிகளைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் பாடசாலைகள் தமது அதிபரின் உறுதிப்படுத்தல் அடங்கிய கடிதத்தினூடாக, தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தௌிவுபடுத்த வேண்டும்.
உரிய விண்ணப்பப்படிவங்களை 2025 மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்னதாக, இலங்கை அறிவியல் மேம்பாட்டுச் சங்கத்தின் labdonationslaas@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.