இலங்கை

தமிழர் பகுதியில் குவிந்துள்ள பாதுகாப்பு படை

2025ஆம் ஆண்டு பாதீட்டின் படி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளார்கள் என முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் 2025ஆம் ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன.

இந்த பாதீட்டை பொறுத்தவரையில், தமிழர் தரப்பை பொறுத்த வரையில் பல்வேறு விடயங்கள் கேள்விக்குறியாகவே உள்ளன என்று விசுவலிங்கம் மணிவண்ணன் கூறியுள்ளார்.

அவர், “இலங்கையினுடைய பாதுகாப்பு படைக்கான ஒதுக்கீடு இம்முறையும் மிக அதிகமாக தான் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பாதுகாப்பு படையை அதிக செறிவாக வைத்திருக்கின்ற இடமாக வடக்கு – கிழக்கு காணப்படுகின்றது. அதேவேளை. இங்கே அவர்கள் குறித்து குற்றச்சாட்டும் ஒன்று இருக்கின்றது.

வடக்கு – கிழக்கில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு போதைப்பொருள் கடத்தல்களோடு தொடர்பு இருக்கின்றது என்ற குற்றச்சாட்டும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது.

படைத்தரப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் இம்முறையும் ஏமாற்றத்தை தான் எதிர்நோக்கியுள்ளார்கள்.

30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தத்திலே, மிகக் கொடூரமாக அழிக்கப்பட்ட தேசமாக வடக்கு – கிழக்கு இருக்கின்றது.

அதனை ஒரு சிறப்பு பிரதேசமாக அங்கீகரித்து, பொருளாதார உட்கட்டமைப்புக்களை மேம்படுத்த வேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகின்றது.

மாநகர சபை என்பது வடக்கு – கிழக்கிலே இருக்கக் கூடிய பிரதான உள்ளூராட்சி மன்றம். அதற்குரிய கட்டடம் இடிக்கப்பட்டு, சிதைவடிக்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

மாநகர சபை ஒரு தற்காலிக இடத்திலேயே இருந்து கொண்டு இருக்கின்றது. அதேவேளை, அதனுடைய கட்டிட நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடை நடுவே இழுத்துக் கொண்டு இருக்கின்றது.

இவ்வாறான நிலையிலே வடக்கு – கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடு என்பது மிக அதிகமாக இருந்திருக்கப்பட வேண்டும். ஆனால், படைத்தரப்புக்கு தான் மிக அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

யுத்தம் நிறைவடைந்து ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் இவ்வாறான ஒரு நிலையே நீடிக்கின்றது. ஆகவே, இந்த பாதீடு, தமிழ் மக்களுக்கு ஒரு பாரிய விமோசனத்தை தரும் என்பது எவராலும் பிரதிபலிக்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *