அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங்கண்டு, அது தொடர்பாக தேவையின் அடிப்படையில் கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவை அடையாளங்காணுமாறு அறிவுறுத்தப்பட்டது.
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.12.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களால், அவற்றின் கீழ் காணப்படுகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் காணப்படுகின்ற பதவி வெற்றிடங்களைப் பூரணப்படுத்துவதற்காக வேண்டுகோள்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
வேண்டுகோள்களைக் கருத்தில் கொண்டு, குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
9 அமைச்சுகள் மற்றும் 2 மாகாண சபைகளுக்காக 5,882 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுக்கு 2,500 பேரும், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு 1,615 பேரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு 909 பேரும் உள்ளடங்கலாக 5,882 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.