அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் மருத்துவர் தவறான முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர், நேற்று (12) இரவு கல்னேவ, நிதிகும்பாயாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
37 வயதுடைய சகோதரி மற்றும் 27 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவரது சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவர் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபரால் திருடப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மருத்துவரை தவறான முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
அநுராதபுரம் மருத்துவமனை பெண் மருத்துவர் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி, தொலைபேசி மூலம் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஞாயிறன்று இரவு பெண் மருத்துவரை அவரது விடுதி அறைக்குள் கூர்மையான கத்தியைக் காட்டி அச்சுறுத்தி அவரை தவறான முறைக்குட்படுத்தியதன் பின்னர் அவரது தொலைபேசியைத் திருடிக் கொண்டு சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் நடமாட்டங்களை, மருத்துவரின் திருடப்பட்ட தொலைபேசி மூலம் பொலிஸார் கண்காணித்துள்ளனர்.
நேற்று(12.03.2025) காலை சந்தேகநபரை கல்னேவ பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.