கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு பெண் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் 30 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த பெண்களை போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் இன்று விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் டுபாயில் வீட்டுப் பணிப்பெண்களாக சென்றிருந்து போதும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இலங்கை தூதரகம் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அவர்களை தற்காலிக கடவுச்சீட்டின் கீழ் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மென்செஸ்டர் ரக 20,000 சிகரெட்டுகள் அடங்கிய 100 சிகரெட் பெட்டிகள் அவர்களது பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
சந்தேகநபர்களில் ஒருவர் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் மற்றையவர் மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் Fly Dubai Airlines இன் FZ-569 விமானத்தில் டுபாயில் இருந்து இன்று அதிகாலை 12.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.