சகல பிரதேச சபைகள் ஊடாக ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணத்திற்கு விண்ணப்பிப்பதற்கும் விண்ணப்பதாரிகளுக்கு நிவாரண நிதியத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில்நடைபெற்ற அமர்வில்,பிரதமருடனான கேள்வி நேரத்தின்போது ஆளும் தரப்பின் உறுப்பினர் டி.கே. ஜயசுந்தர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் ,”ஜனாதிபதி நிதியத்தின் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். சகல பிரதேச சபைகள் ஊடாக நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு நிகழ்நிலை முறைமை ஊடாக விண்ணப்பம் செய்வதற்கும், பிரதேச சபைகள் ஊடாக நிவாரண நிதியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய கணினி கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அரச உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். ஏழ்மை ஒழிப்பு, கல்வி மற்றும் மத மேம்பாடு மற்றும் நாட்டுக்கு சேவையாற்றிய தரப்பினருக்கு நிவாரணமளித்தல் மற்றும் நலன்புரி சேவைகளுக்காக ஜனாதிபதி நிதியம் உருவாக்கப்பட்டது.
1978ஆம் ஆண்டு 07ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் நிதியத்தின் தலைவராக ஜனாதிபதியும் நிர்வாக சபையின் உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நலனை கருத்திற்கொண்டே ஜனாதிபதி நிதியம் உருவாக்கப்பட்டது.
கடந்த கால அரசாங்கங்களில் ஜனாதிபதிகளின் நண்பர்கள் மற்றும் அவர்களுக்கு சார்பான அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே நிதி வழங்கப்பட்டது.நிதியம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது. நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறையற்ற வகையில் நிதி பெற்றுக்கொண்டவர்கள் நாட்டுக்கு சேவையாற்றியவர்கள் என்ற அடிப்படையில் நிதி பெற்றுக்கொள்ளவில்லை. இவ்விடயம் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” என கூறியுள்ளார்.