அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் தொடர்பான சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் என்.எஸ்.குமாரநாயக்கவினால் சுற்றறிக்கையில் வாகனங்கள், எரிபொருள், தொலைபேசி ஏனைய சலுகைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தமது அரச கடமைகளுக்காக ஆகக் கூடியது இரு உத்தியோகபூர்வ வாகனங்களை மாத்திரமே பயன்படுத்த முடியும். அந்த வாகனங்களுக்காக மாதாந்தம் 900 லீற்றர் எரிபொருள் ஒதுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு இரு அலுவலக தொலைபேசிகள், ஒரு வீடு, ஒரு கையடக்க தொலைபேசி மற்றும் ஒரு தொலைநகல் இயந்திரம் என்பவை மட்டுமே அரசாங்கத்தின் நிதி வழங்கப்படும்.
அலுவலக மற்றும் வீட்டு தொலைபேசிக்காக 20,000 ரூபா அதிகபட்ச கொடுப்பனவும், கையடக்க தொலைபேசிக்காக அதிபட்சம் 10,000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படும். அமைச்சர்கள் அலுவலகப் பணிகளுக்காக செயலாளர்கள் உட்பட 15 உத்தியோகத்தர்களையும், பிரதி அமைச்சர்களும் அதேபோன்று 12 உத்தியோகத்தர்களையும் நியமிக்க முடியும். இந்த வரையறைகள் கடந்த 6ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சுற்றுநிரூபத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.