அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக அரசியல் பழிவாங்களை தொடங்கியுள்ளதானது தெளிவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். கிரிஷ் நிறுவனம் தொடர்பான வழக்கில் தனக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளமை தொடர்பில் எக்ஸ் (X) கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது, இந்த விவகாரம் ஆரம்பத்தில் விசாரிக்கப்பட்டபோது, 8 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமா அதிபரிடம் பரிந்துரைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பின்னணியில், 8 ஆண்டுகளின் பின்னர் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமையானது, அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக அரசியல் பழிவாங்கலை தொடங்கியுள்ளதை தெளிவாக்கியுள்ளதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை புனைவதன் மூலம், நாட்டை நிர்வகிப்பதிலும், மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான சுமைகளைக் குறைப்பதிலும் இழைக்கப்பட்ட தோல்விகளின் மீதான கவனத்தைத் திசைதிருப்ப முடியும் என்று நம்புவதாயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களின் குறைப்பாடுகள் விரைவில் அனைவரும் காணும் வகையில் வெளிப்படும் என்றும் ராஜபக்சர்களை தாக்குவதன் மூலம் அரசாங்கத்தால் தங்கள் தோல்விகளை நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.