அரசியல் இலஞ்சம் பெறுகின்றவர்கள், கட்டாயம் எமது இனத்தைக் காட்டிக் கொடுப்பார்கள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கத் தேவையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை மூலமாக சமூகச் சீரழிவை ஏற்படுத்துவது தொடர்பில் நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்.இது குறித்து பலவிதமான வேலைத்திட்டங்களைப் பல காலமாகச் செய்து வருகின்றோம். அரசியல் இலஞ்சமாக சமூக விரோத செயற்பாட்டுடன் தொடர்புடைய மதுபான சாலைகள் வழங்கப்பட்டமை பிரதான விடயமாகப் பார்க்கப்பட வேண்டும்.
தமிழ் அரசியல்வாதிகள் சிலர் சம்பந்தப்பட்டிருந்தார்கள், தாமாகவே தேர்தல் அரசியலிலிருந்து விலகினார்கள். ஆனால், பலர் வாய்மூடி மெளனிகளாக இருக்கின்றார்கள். இது தொடர்பாக மக்கள் தமது கரிசனையைச் செலுத்தவேண்டும். அரசியல் இலஞ்சம் பெறுகின்றவர்கள், கட்டாயம் எமது இனத்தைக் காட்டிக் கொடுப்பார்கள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கத் தேவையில்லை. தங்களுடைய சொந்த நலன்களுக்காகச் சொத்துக்களைக் குவிப்பதற்காகப் பலர் இவ்வாறு செயற்படுகின்றார்கள். அவர்களை அடையாளம் கண்டு மக்கள் சரியான விதத்தில் செயற்படவேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை” என்றார்.